விளாத்திகுளம், ஆகஸ்ட் 05 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஓ. லட்சுமி நாராயணபுரம் கிராமத்தில் ஸ்ரீ ஓடக்கரை முத்துசாமி மற்றும் ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் ஆடி மாத கொடைவிழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் பூஞ்சிட்டு, தேஞ்சிட்டு என நடைபெற்ற இரு போட்டிகளில் தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 84 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டன.
பொதுவாக மாலையில் நடைபெறும் மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் குறைந்த எண்ணிக்கையில் ஜோடி மாடுகள் கலந்து கொள்ளும். ஆனால் இந்த விழாவில் வழக்கத்துக்கு மாறாக சுமார் 84 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. பூஞ்சிட்டு போட்டியில் 52 மாடு ஜோடிகளும், தேன்சிட்டு போட்டியில் சுமார் 32 மாட்டு வண்டி ஜோடிகளும் பங்கேற்றன. இந்த இரண்டு போட்டிகளையும் சுமார் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டியானது நடைபெற்றது.
நடைபெற்ற மாபெரும் மாட்டு வண்டி பந்தயத்தை விளாத்திகுளம் முன்னாள் ஒன்றியக் குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன் மற்றும் விழாக் கமிட்டியாளர்கள் தொடங்கி வைத்தனர். பொதுவாக மாலையில் நடைபெறும் மாட்டு வண்டியில் பந்தயம் மாலை 4 மணிக்கு தொடங்கப்பட்டு 6 மணி அளவில் முடிவடைவது வழக்கம். ஆனால் வழக்கத்துக்கு மாறாக அதிக அளவில் மாட்டு வண்டிகள் கலந்து கொண்டதால் இரவு 7:30 மணி வரை இந்த போட்டியானது நடைபெற்றது. இருட்டையும் பொருட்படுத்தாமல் சாரதிகள் தங்களின் அனுபவத்தினால் நேர்த்தியாக மாட்டை இயக்கியதால் மாடுகள் இருட்டிலும் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன.
இரவு வரை நடைபெற்ற இந்த மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயத்தை சாலையின் இருபுறமும் நின்று ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஒட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டி சார்பாக பரிசுத்தொகை மற்றும் சுழல் கோப்பை வழங்கி கௌரவிக்கப்பட்டது. ராமலிங்கம் அவர்களின் நினைவாக வெற்றியாளர்களுக்கு சுழல் கோப்பை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.