நாகர்கோவில், ஜூலை 31 –
3 மாதங்களாக குமரி மாவட்ட ஆட்சியரை சிபிஐஎம்எல் குமரி மாவட்ட செயலாளர் அந்தோணி முத்து சந்தித்து மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசாங்கம் மாதந்தோறும் 1200 ரூபாய் நலவாரிய பயனாக வழங்கி வருகிறது. சமீப காலமாக அதாவது மே, ஜீன், ஜூலை ஆகிய மூன்று மாத காலங்கள் இவர்களுக்கு சரிவர பென்சன் வராமல் உள்ளது. மாதம் தோறும் 1200 ரூபாய் வருவதன் மூலமாக கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர்கள் மாத பென்சனை பயன்படுத்தி மருந்து மாத்திரைகள் வாங்குவது, போன்ற அத்தியாவசிய செலவுகளுக்கு மாத பென்சன் மிகவும் உதவிகரமாக உள்ளது.
தமிழ்நாடு அரசாங்கம் மாதம்தோறும் 1200 ரூபாய் வீதம் கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர்களுடைய வங்கிக் கணக்குகளில் பணம் கிடைப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்குகின்ற நலவாரிய அலுவலகங்கள் மாதம்தோறும் தொழிலாளர்களுக்கு கிடைக்கக்கூடிய மாதப் பென்சன்தாரர்களுக்கு முறையாக இந்த பணத்தை வழங்குவதில்லை. எனவே, மாவட்ட ஆட்சித்தலைவர் தலையீடு செய்து கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர்களின் மாத பென்சன் நிலுவைத் தொகையின்றி மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் கிடைக்காத மாத பென்சனை தொழிலாளர்களின் வங்கிக் கணக்குகளில் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.