ஈரோடு, ஜூலை 29 –
பொது நூலகத்துறை மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி வளாகத்தில் புத்தகத் திருவிழா வருகிற 1 ந் தேதி முதல் 12 ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராட்சத பலூனை பறக்கவிட்டார்.
இப்புத்தக கண்காட்சியில் சுமார் 230 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. வெளிநாடுகளிலிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் புகழ்மிக்க பதிப்பாளர்கள் வருகை தந்து அரங்குகளை அமைக்க உள்ளார்கள். இப்புத்தகத் திருவிழா கண்காட்சி காலை 11.00 மணி முதல் இரவு 9.30 வரை நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் தலைசிறந்த சொற்பொழிவாளர்கள், அறிஞர்கள் கருத்துரை வழங்க உள்ளார்கள்.
இதனை முன்னிட்டு புத்தக திருவிழா நடைபெறுவது குறித்து பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விளம்பர பணிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து இன்றைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ராட்சத பலூனை பறக்கவிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இப்புத்தக கண்காட்சியை பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசுப்போட்டித்தேர்வுகளுக்கு பயிலும் மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள் பயன்படுத்தி கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி. சந்திரகுமார், மாநகராட்சி மேயர் திருமதி சு. நாகரத்தினம் சுப்பிரமணியம், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், ஈரோடு மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின், மாநகராட்சி துணை ஆணையர் தனலட்சுமி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.