சுசீந்திரம், ஜீலை 28 –
நாகர்கோவில் அருகே உள்ள என்.ஜி.ஓ. காலனியை அடுத்த பரப்புவிளை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகேஷ் (29). இவரது மனைவி மஞ்சு (27). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு சுதீஷ் (3) என்ற மகனும், நமித்ரா (2) என்ற மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை நமித்ரா வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். திடீரென அவரை காணவில்லை. இதையடுத்து அவரது தாயார் மஞ்சு குழந்தையைத் தேடிப் பார்த்தார். அப்போது வீட்டின் முன்பு சென்று கொண்டிருந்த கால்வாயில் நமித்ரா தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தார்.
இதையடுத்து மஞ்சு கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த நமித்ராவை மீட்டனர். மீட்கப்பட்ட குழந்தையை சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நமித்ராவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். பலியான குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து நமித்ராவின் தந்தை மகேஷ் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் பொறுப்பு இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.