நிலக்கோட்டை, ஜூலை 21 –
நிலக்கோட்டை அருகே உள்ள சீரகம்பட்டியைச் சேர்ந்தவர் சிவராம் மனைவி கஸ்தூரி (20). இவருக்கு கடந்த 3.7.2025 அன்று அருகே உள்ள எஸ். தும்மலப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2 வது பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து மூன்று தினங்களுக்கு பின்பு தாய், குழந்தை ஆகியோர் நலமுடன் வீடு திரும்பினர். பின்னர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அப்பகுதியைச் சேர்ந்த செவிலியர் கஸ்தூரி வீட்டிற்கு சென்று பச்சிளம் பெண் குழந்தை 11.7.2025 அன்று பார்வையிட்டு நன்றாக இருப்பதாக பரிசோதித்து தாய் கஸ்தூரிக்கு சில ஆலோசனைகள் வழங்கிவிட்டு வந்துவிட்டார்.
பின்னர் திடீரென்று 15.7.2025 அன்று குழந்தை மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்து விட்டதாகவும் அக்குழந்தையை வீட்டின் அருகே புதைத்து விட்டதாகவும் தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இந்த இறப்பில் சந்தேகம் இருப்பதாக எஸ். தும்மலப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் முகமது முஸ்தபா நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்ய பிரபாவிடம் கொடுத்த புகாரின் படி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அருண்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் 19.7.2025 காலை 11 மணி அளவில் பச்சிளம் குழந்தையை புதைத்த இடத்தில் மருத்துவர்கள் முன்னிலையில் தோண்டி எடுத்து பரிசோதனை நடைபெற்று வருகிறது. நிலக்கோட்டை வட்டாட்சியர், மாவட்ட மருத்துவ குழுவினர், காவல்துறை உயரதிகாரிகள் பெற்றோர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். நிலக்கோட்டை அருகே ஊத்துப் பட்டியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பிறந்து சில தினங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை வீட்டின் பின்புறம் குழந்தையின் தாய் புதைத்த சம்பவத்தைத் தொடர்ந்து சீரகம்பட்டியில் நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.