நாகர்கோவில், ஜூலை 4 –
குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குற்றமில்லா, விபத்தில்லா மாவட்டமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தல் தொடர்பாக தினமும் 6 முதல் 7 புகார்கள் வருகின்றன. எனவே அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சி பற்றிய விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இன்னும் 2 வாரங்களில் அந்த பணிகள் முடிந்து விடும். அதன் பிறகு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பின்னர் அங்கீகாரம் இல்லாத ஏஜென்சி வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறினால் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கலாம்.
கன்னியாகுமரிக்கு பல்வேறு இடங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகின்றனர். ஆகவே, அங்கு புற காவல் நிலையம் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் அனைத்து மொழிகளும் பேசும் வகையில் செயற்கை நுண்ணறிவு ரோபோ ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுற்றுலாத்தலங்களில் காதல் ஜோடி அத்துமீறலை தடுக்கும் வகையில் சாதாரண உடையில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டத்தின் மூலம் வாரத்திற்கு 3 கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்து வருகிறோம். அவர்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டம் முழுவதும் போலீஸ் சார்பில் 1200 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகரப் பகுதியில் மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள சில கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாமல் உள்ளது. அந்த கேமராக்களை சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். நாகர்கோவில் மாநகரில் காலை, மாலை நேரத்தில் போக்குவரத்தை சரி செய்ய குறைவான போலீசாரே இருந்தனர்.
ஆனால், தற்போது 40 போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஒரு சில இடங்களில் தேவை இல்லாமல் தடுப்புகள் உள்ளதாக புகார் வந்துள்ளது. தேவையில்லாத இடங்களில் உள்ள தடுப்புகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் கூடுதல் போலீசார் நியமனம் செய்யப்படுவர்.
குமரியில் கனரக வாகனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சில இடங்களில் கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்வதாக புகார்கள் வந்துள்ளது. இது மட்டுமின்றி தேங்காய் பட்டணத்திற்கு செல்லும் கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. எனவே பள்ளிகள், கல்லூரிகள் நேரங்களில் கனரக வாகனங்கள் அந்தப் பகுதியில் செல்லாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாவட்டம் முழுவதும் கனரக வாகனங்கள் இயக்குவதற்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்படும்.
பொதுமக்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். தற்போது தினமும் 150 பேர் வரை செல்போன் மூலம் புகார்களை தெரிவித்து வருகின்றனர். புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக புகார் தெரிவிப்பவர் விவரம் பாதுகாப்பாக வைக்கப்படும் என்றார்.