தூத்துக்குடி, ஜூலை 2 –
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 530 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் அறிவுறுத்தினார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 33 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து உலக சிக்கன நாள் விழா 2024 முன்னிட்டு நடைபெற்ற கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி, சொற்டர் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 12 மாணவ மாணவியர்களுக்கு புத்தகங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்கள்.
மேலும், 2023 – 2024ம் நிதியாண்டில் சிறுசேமிப்புத் திட்டத்தில் சாதனை புரிந்த நிலை முகவர்கள் மற்றும் மகளிர் முகவர்களுக்கு முதலிடம் பெற்றவர்களுக்கு கேடயம் மற்றும் ரூ.3000, இரண்டாமிடம் பெற்றவர்களுக்கு ரூ.2000 மற்றும் மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு ரூ.1000 மற்றும் தேசிய சேமிப்பு பத்திரங்களும் வழங்கப்பட்டது.
அதனடிப்படையில், மாவட்ட அளவில் சிறுசேமிப்பு வசூலில் சாதனை புரிந்து முதல் மூன்று இடங்களை பெற்ற நிலை முகவர்களுக்கு கேடயம் மற்றும் தேசிய சேமிப்பு பத்திரங்களும், மாவட்ட அளவில் சிறுசேமிப்பு வசூலில் சாதனை புரிந்து முதல் மூன்று இடங்களை பெற்ற மகளிர் முகவர்களுக்கு கேடயம் மற்றும் தேசிய சேமிப்பு பத்திரங்களும், நகர்புற அளவில் சிறுசேமிப்பு வசூலில் சாதனை புரிந்த இரண்டு மகளிர் முகவர்களுக்கு தலா ரூ.1000 மற்றும் தேசிய சேமிப்பு பத்திரமும், ஊராட்சி ஒன்றிய அளவில் சிறுசேமிப்பு வசூலில் சாதனை புரிந்த 12 மகளிர் முகவர்களுக்கு தலா ரூ.1000 மற்றும் தேசிய சேமிப்பு பத்திரங்களை மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. இரவிச்சந்திரன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.