மதுரை, ஜூன் 30 –
மதுரை மாவட்டம், கோவில் பாப்பாகுடியில் புதிய தார் சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அமைச்சர் மூர்த்தி வந்திருந்த நிலையில் பொதுமக்கள் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும் கழிவுநீர் கால்வாய் தேங்கி துர்நாற்றம் வீசுவதாகவும் இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு அமைச்சரை முற்றுகையிட்டனர்.
இந்த நிலையில் கோவில் பாப்பாகுடி ஊராட்சியில் பல்வேறு ஊராட்சிகளுக்காக வழங்கப்பட வேண்டிய புதிய பேட்டரி கார்களை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிலையில் அமைச்சர் மூர்த்தியின் கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட வெளிச்ச நத்தம் ஊராட்சிக்கு வழங்க கூடிய பேட்டரி கார்களை கொடியசைத்து துவக்கி வைத்தவுடன் பணியாளர்கள் பேட்டரி காரை இயக்க முன்வந்தனர். ஆனால், புதிய பேட்டரி கார்கள் இயக்க முடியாத சூழ்நிலையில் பழுதாகி நின்று விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் செய்வதறியாது திகைத்தனர். ஒரு வழியாக சமாளித்த பணியாளர்கள் நான்கு பேர் பேட்டரி காரை தள்ளுவண்டி போல் தள்ளிக் கொண்டே சென்றனர்.
அதனைப் பார்த்த பொதுமக்கள் ஊராட்சியின் குப்பைகளை அள்ள வேண்டிய பேட்டரி கார்களை பயன்பாட்டிற்கு வழங்கிய முதல் நாளிலேயே பழுதாகி நின்ற அவலம் வேறு எங்கும் நடக்கவில்லை. இந்த நிலையில் தினசரி இந்த பேட்டரி கார்களை வைத்து ஊராட்சி பணிகளை எப்படி செய்ய முடியும். இதே போன்றுதான் திமுக அரசின் அனைத்து திட்டங்களும் உள்ளது. மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தாமல் கட்சியினருக்காக இதுபோன்று பராமரிக்கப்படாத நிலையில் பழுதடைந்த இயந்திரங்களை ஊராட்சிகளுக்கு வழங்குவதால் ஊராட்சிகளின் பணிகள் முடங்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்தும் அது குறித்து யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை. ஆகையால், பழுதடைந்த பேட்டரி கார்களை மாற்றி விட்டு புதிய பேட்டரி கார்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறிச் சென்றனர்.