திண்டுக்கல், ஜூன் 26 –
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு (வைகை) தனியார் அறக்கட்டளை மற்றும் புதுதில்லி (மகேந்திரா) தனியார் அறக்கட்டளை சார்பில் எதிர்கால சந்ததியினருக்காக பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மஞ்சப்பை, துணிப்பை பயன்படுத்துவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். பேராசிரியர் பாண்டீஸ்வரி, செனார்டு தொண்டு நிறுவன இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, ரோட்டரி சங்க தலைவர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒருங்கிணைப்பாளர் தங்கம்மாள் வரவேற்றார். நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு மஞ்சப்பை, துணிப்பைகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கி அதன் அவசியம் குறித்து விளக்கினர். பூமியில் இரசாயன உரம் பூச்சிக்கொல்லி மருந்தால் நஞ்சாவதை தவிர்க்கவும் தொழிற்சாலை புகைகள் வாகன புகைகளால் ஏற்படும் காற்று மாசுவை குறைக்கவும் வழியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர்.
மேலும் இந்த கூட்டத்தில் நன்னீர் மற்றும் சுகாதார உரிமைக்கான கூட்டமைப்பின் மாநில தலைவர் அண்ணாதுரை தலைமையில் சுற்றுச்சூழலை காப்பது குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். கூட்டத்தில் ஒருங்கிணைந்து சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் நீர் ஆதாரங்களை பாதுகாக்கவும் இயற்கை விவசாய விவசாயத்தை கடைப்பிடிக்கவும் வழியுறுத்தப்பட்டது.