ராமநாதபுரம், டிச.2: ராமநாதபுரம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டதாக பாஜக மாவட்ட துணைத் தலைவர் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பரமக்குடி தாலுகா போகலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது முதலூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி டிஎஸ்பியாக இருந்து ஓய்வு பெற்றவர். போகலூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினராக அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தற்போது ராமநாதபுரம் மாவட்ட பாஜக துணைத் தலைவராக உள்ளார். நேற்று முன்தினம் ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய எஸ்ஐ கார்த்திகை ராஜா, சிறப்பு எஸ்ஐ ஜெயபாலன் தலைமையில் போலீசார் நீல கண்டி ஊரணி பகுதியில் ஆற்று மணல் கடத்தி வருவதாக வந்த தகவலின் அடிப்படையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர் அப்பொழுது, அதிவேகமாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தியுள்ளனர். அது நிற்காமல், சிறிது தூரம் சென்று நின்ற லாரியில் இருந்தவர்கள் தப்பிச் சென்று விட்டனர்.3 யூனிட் ஆற்று மணல் ஏற்றி வந்த லாரியை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மணல் எடுத்துச் செல்வதற்கான முறையான ஆவணங்கள் இல்லாததால், மணல் கடத்தியதாக லாரி டிரைவர் முதலூர் மணிகண்டன் (32), லோகநாதன் (27), சேகர் (31) ஆகியோரை போலீசார் கைது செய்தனர் மேலும், இந்தக் கடத்தலுக்கு தொடர்புடையதாக பாஜக மாவட்ட துணைத் தலைவர், முன்னாள் டி எஸ் பி ராமசாமி,அவரது மகன் மனோஜ், முதலூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக், கந்த பாண்டி,ராமர்,விக்னேஷ்,கபில் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர். தொடர்ந்து முதலூர், வைரவனந்தல் உள்ளிட்ட பகுதிகளில் ஆற்று மணல் அடிக்கடி கடத்தப்படுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.



