குலசேகரம், மே – 21.
நாகர்கோவில் கீழப்பெருவிளையை சேர்ந்தவர் காட்சன் சாமுவேல். கிறிஸ்தவ மத போதகர். இவர் பனைமர ஆய்வாளராக உள்ளார். குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார். விடுமுறை காலங்களில் சொந்த ஊருக்கு வரும்போது பழங்குடி மக்களின் கிராமங்களில் சென்று அவர்களுக்கு உதவி செய்து வழக்கம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கோதையாறு அருகே உள்ள மலை பழங்குடி குடியிருப்புக்கு 20 பேர் கொண்ட குழுவினர் வந்து அங்கு பழங்குடி மக்களை சந்தித்தனர். பின்னர் அனைவரும் அந்த பகுதியில் உள்ளவர் மரத்தின் அடியில் அமர்ந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மரத்தின் பெரிய கிளை முறிந்து அவர்கள் மீது விழுந்துள்ளது. இதில் காட்சன் சாமுவேல் மகன் மித்ரன் (13) மற்றும் ஜெயக்குமார் என்பவரின் மகள் கிஸ்லின் (4) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மேலும் சிலருக்கு காயம் ஏற்பட்டது.
உடனடியாக அனைவரையும் குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். அங்கு மித்ரன் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து பேச்சிப்பாறை போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.