பரமக்குடி,ஏப். 29
பரமக்குடி மாவட்ட அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 28 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக் கொண்டு ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொண்டனர். அதேபோல் ஆசிரியர்களின் காலை தொட்டு வணங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மஞ்சூரில் 1993 ஆம் ஆண்டு முதல் மாவட்ட அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம். இங்கு 1995 ஆம் ஆண்டு முதல் 1997 ஆம் ஆண்டு வரை 50 மாணவ, மாணவிகள் கல்வி பயின்றுள்ளனர். இவர்கள் தற்போது ஆசிரியர்கள் பேராசிரியராக பள்ளி, கல்லூரிகளில் பணிபுரிந்து வருகின்றனர். அரசு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 1995 ஆம் ஆண்டு முதல் 1997 ஆம் ஆண்டு படித்த மாணவ, மாணவிகள் 28 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தாங்கள் பயின்ற கல்வி நிறுவனத்தில் சந்தித்துக் கொண்டனர். ஒருவருக்கொருவர் தங்களுக்கு பாடம் கற்று கொடுத்த ஆசிரியர்களுடன் நினைவுகளை பகிர்ந்து கொண்டு குழு போட்டோக்கள் எடுத்து ஒருவருக்கொருவர் அன்பை பகிர்ந்து கொண்டனர்.
முன்னதாக தங்களுக்கு பாடம் கற்பித்து கொடுத்த ஆசிரியர்களுக்கு மலர் தூவி வரவேற்றனர். 1995 ஆம் ஆண்டு கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள், உடன் பயின்று உயிரிழந்த மாணவர்களின் போட்டோக்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தனர். 1995 ல் கல்வி பயின்றவர்கள் தற்போது திருமணம் ஆகி பேர குழந்தைகள் உள்ளனர்.. இந்த நிலையிலும் தங்களது வயதினை பொருட்படுத்தாமல் பாடம் கற்பித்த ஆசிரியர்களின் கால்களை தொட்டு வணங்கி ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டனர். அரசு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் 28 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து கொண்டு அன்பை பரிமாறி கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



