ஈரோடு ஏப் 5
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனக்கோட்டத்தில் அமைப்பு சாரா பழங்குடி தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு செய்தல் மற்றும் விழிப்புணர்வு முகாம் ஆசனூர் வனக்கோட்டம் துணை இயக்குநர் சுதாகர் (சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்) தலைமையில் நடைபெற்றது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம். ஆசனூர் வனக்கோட்டத்தில் காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றம் பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் பட்டியல் பழங்குடியினர் வாழும் கிராமங்களில் 21 சூழல் மேம்பாட்டு குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. மேலும் ஆசனூர், கேர்மாளம், தாளவாடி, ஜீரகஹள்ளி, ஆகிய வனச்சரகங்களில் 44 வனக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. மேற்படி திட்டத்தின் கீழ் குழு உறுப்பினர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சிகள், சமுதாய வாழ்வாதார மேம்பாட்டு பணிகள். தனிநபர் தொழில் தொடங்குவதற்கான இயந்திரங்கள் வழங்குதல், சிறு தொழில் தொடங்க தனிநபர் மற்றும் குழுக்களுக்கான நிதியுதவி போன்ற பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து அத்துறை சார்ந்த அலுவலர்களைக் கொண்டு குழு உறுப்பினர்கள் பயனடையும் வகையில் விழிப்புணர்வு கூட்டங்கள் அவ்வப்போது வனத்துறை ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக ஆசனூர் வனக்கோட்ட அலுவலகத்தில் பழங்குடியினர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு அமைப்புசாரா தொழில்களான கொத்தனார், சித்தாள், மின்பணியாளர். தச்சர் உள்ளிட்ட 54 வகையான கட்டுமான தொழில்கள் மற்றும் தையல், சிற்ப வேலை, ஒட்டுநர், வனப் பொருட்கள் சேகரித்தல் உள்ளிட்ட 62 வகையான தொழில்களில் ஈடுபட்டு வரும் பழங்குடியினர் மற்றும் இதர வகுப்பினர்களுக்கு தொழிலாளர் நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் 20 தொழிலாளர் நல வாரியங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கட்டுபாட்டில் இயங்கும் நலவாரியம் ஆகியவை தொழிலாளர்களின் பணி பாதுகாப்பு மற்றும் குடும்ப
நலன் மேம்பாடு குறித்து வழங்கி வரும் அரசின் நலத்திட்டங்கள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மற்றும் தகுதியான தொழிலாளர்களை சம்பந்தப்பட்ட நல வாரியத்தில் உறுப்பினராக சேர்க்கவும் விழிப்புணர்வு மற்றும் பதிவு செய்தல் முகாம் வனத்துறை ஒருங்கிணைப்பில் ஆசனூர் வனக்கோட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
இம்முகாமில், ஆசனூர், தாளவாடி, கேர்மாளம், ஜீரகஹள்ளி வனச்சரக அலுவலர்கள், வனத்துறை களப்பணியாளர்கள், சூழல் மேம்பாட்டு மற்றும் வனக்குழுக்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டு வரும் பழங்குடியின தொழிலாளர்கள் என சுமார் 200 நபர்கள் கலந்து கொண்டனர்.
முகாமில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.இராஜகோபால் அவர்கள் பழங்குடியின நல வாரியத்தில் கிடைக்கும் நன்மைகள் குறித்து எடுத்து கூறினார். தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முருகேசன் தொழிலாளர் நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் நல வாரியங்களின் விவரங்களையும், அவற்றின் பதிவு செய்யும் முறைகளையும் தொழிலாளர் நல வாரியங்களில் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் பணி பாதுகாப்பு மற்றும் குடும்ப மேம்பாட்டிற்கு கிடைக்கும் பலன்களையும் எடுத்துரைத்தார். தொடர்ந்து, வனத்துறை களப்பணியாளர்கள் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இவர்களில் சுமார் 50 பேர் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்தனர்.