ஈரோடு மார்ச் 2
ஈரோடு மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு
முகாம் வருகிற
15 ந் தேதி ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதை அமைச்சர் முத்து சாமி தொடங்கி வைத்து பணிநியமன ஆணைகளை வழங்குகிறார்.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் 200 க்கும் மேற்பட்ட தனியார்துறை வேலை அளிப்பவர்கள் கலந்துகொண்டு 10,000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தங்கள் நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் +2 தேர்ச்சி, பட்டயப்படிப்பு படித்தவர்கள், பட்டதாரிகள், ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டம் படித்தவர்கள், கணினி இயக்குபவர்கள், ஓட்டுநர்கள், செவிலியர், மருந்தாளுநர் பயிற்சி முடித்தவர்கள் என அனைத்து கல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு. அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் குறித்த வழிகாட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே, ஈரோடு மாவட்டத்தில் தனியார்துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் என்றும் இம்முகாமின் மூலம் வேலை வாய்ப்பு பெற்றவர்களின்
வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது என்றும் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
இம்முகாமில் கலந்துகொள்ள முன்பதிவு கட்டாயமானதாகும் என்றும் கூறப்பட்டு உள்ளது.