திருவாரூர்
பிப்ரவரி 22
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன், செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நன்னிலம் ஒன்றியத்திற்குட்பட்ட அச்சுதமங்கலம் ஊராட்சியில் 2023-2024 சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.13.5 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் அங்கன்வாடி மையம் கட்டடத்தினை பார்வையிட்டு, தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியர்களின் கல்வி தரம் குறித்து தெரிந்துகொள்ளும் விதமாக பள்ளி மாணவ, மாணவியர்களின் பாடப்புத்தகங்களை படித்து காட்டுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதன் அடிப்படையில் பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் புத்தகங்களை வாசித்து காட்டினார்கள். அதனை தொடர்ந்து
அச்சுதமங்கலம் ஊராட்சி, திருப்பணிபேட்டை கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பயன்பெற்றுவரும் பயனாளியிடம் அளிக்கப்பட்டுவரும் மருத்துவ சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்.
திருவாஞ்சியம் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றுவருவதையும், தோட்டக்கலைத்துறையின் மூலம் தென்னைகன்று, கொய்யாகன்று தேக்கு போன்ற அனைத்து வகையான ரகங்கள் பசுமைக்குடிலில் பராமரிக்கப்பட்டுவருவதையும், திருவாஞ்சியம் பகுதியில் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் என பிரிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டுவரும் தொட்டியினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு (2023-2024) திட்டத்தின் கீழ் பருத்தியூர் ஊராட்சியில், ரூ.39 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினையும், அச்சுதமங்கலம் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளியால் கட்டப்பட்டுவரும் குடியிருப்பு வீட்டினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அரசு ஆரம்ப சுகாதார நிலைய நலவாழ்வு மையத்தில் வெளிநோயாளிகளின் விவரப்பதிவேடு, மருந்து பொருட்களின் இருப்பு பதிவேடுகளை பார்வையிட்டு, மருத்துவர்களிடம் கலந்துரையாடினார்.
நன்னிலம் ஊராட்சி மன்ற அலுவலகம், பருத்தியூர் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் திருவாஞ்சியம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டுவரும் பதிவேடுகள் குறித்து அலுவலக பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.
வேளாண்மை விரிவாக்க மையத்தினையும், வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டுவரும் பதிவேடுகள் குறித்தும், தொடர்ந்து, மூங்கில்குடி மாநில அரசு விதைப்பண்ணையில் இருப்பில் உள்ள மரக்கன்று மற்றும் விதைகளின் இருப்பு விவரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.
இச்செய்தியாளர் பயணத்தில், நன்னிலம் வட்டாட்சியர் ரஷியாபேகம், நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் கலந்து கொண்டனர்.