ஆரல்வாய்மொழி பிப் 6
கன்னியாகுமரி மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் ஊக்கத் தொகையினை ஆவின் மூலம் தான் வழங்க வேண்டும் என நிர்ப்பந்தம் செய்வதால் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் அழிவின் விளிம்பிற்கு சென்று கொண்டிருக்கிறது. இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா? என முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
ஒவ்வொரு குக்கிராமங்களிலும் பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் விதத்தில் அப்பகுதியில் உள்ள உள்;ர் பால் உற்பத்தியாளர்கள் தொடக்கத்தில் உள்ளூர் விநியோக சங்கம் என்று ஆரம்பித்து, பின்னர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கமாக செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் மூலம் உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கப்படுகின்ற பால்கள் அந்தந்த கிராம பொதுமக்களுக்கு விநியோகம் செய்கின்ற விதத்தில் செயல்பட்டு வந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 58 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. தற்போது கூட்டுறவு சங்களில் பால் உற்பத்தியாளர்களால் வழங்கப்படுகின்ற பாலின் பெரும் பகுதியினை கூட்டுறவு சங்கங்கள் ஆவினுக்கு வழங்க வேண்டும் என நிர்ப்பந்தம் படுத்தப்படுகிறது. இதனால் 40 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களிலிருந்து ஆவினுக்கு நாள் தோறும் சுமார் 5 ஆயிரம் லிட்டர் பால், வழங்கப்பட்டு வருகிறது.
இதனால் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பால் சரிவர வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி பாதிக்கப்பட்டுள்ளனர்.
பால் உற்பத்தியாளர்கள் உற்பத்தி விலையினை அதிகரிக்க வேண்டும் என பல முறை அரசிடம் வலியுறுத்தப்பட்டதன் மூலம் உற்பத்தி விலையினை உயர்த்தாமல், லிட்டருக்கு ரூ. 3 வீதம் ஊக்கத் தொகை என தமிழக அரசு அறிவித்தது. இந்த ஊக்கத் தொகையினை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் பால் உற்பத்தியாளர்களுக்கு மாதந்தோறும் உற்பத்தி தொகை வழங்குகின்ற போது இந்த ஊக்கத் தொகையினையும் வழங்கி வந்தனர். தற்போது பால் வழங்கப்பட்டு வருகின்ற ஊக்கத் தொகையினை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் உற்பத்தியாளர்களுக்கு நேரடியாக வழங்காமல், அத்தொகையினை ஆவினுக்கு வழங்க வேண்டும் எனவும், ஆவின் நிர்வாகத்தின் மூலம் உற்பத்தியாளர்களுக்கு அந்த ஊக்கத் தொகை வழங்கப்படும் என நிர்ப்பந்தப்படுத்தி பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை இயக்குநர் அலுவலகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. தற்போது பால் உற்பத்தியாளர்களால் தேர்வு செய்யப்பட்ட நிர்வாக குழுவின் பதவி காலம் முடிவுற்ற நிலையில் ஒவ்வொரு பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கும் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் இதுபோன்ற சுற்றறிக்கைகளை நிறைவேற்ற நிர்ப்பந்தப் படுத்துகின்றார்கள்.
பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாலின் அளவை குறைத்து பெரும்பாலான பாலினை ஆவினுக்கு வழங்க வேண்டும் என நிர்ப்பந்தம் படுத்தப்பட்ட நிலையில், ஆவினால் தாயாரிக்கப்படுகின்ற அனைத்து பொருட்களையும் விற்பனை செய்ய வேண்டும் என நிர்ப்பந்தப் படுத்தப்படுகிறது.
எனவே பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படுகின்ற உற்பத்தி தொகை மற்றும் ஊக்கத் தொகையினை அந்தந்த பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தான் வழங்க வேண்டும். இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிக்கையில் கூறியுள்ளார்.