தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி 4 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி தாலுகா அலுவலகம் முன்பு மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார்,ஒன்றிய செயலாளர் சுசிலா மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பினர். பாலக்கோட்டையில் வட்ட தலைவர் அண்ணாமலை தலைமையிலும், பென்னாகரத்தில் சங்க மாவட்ட தலைவர் கரூரான் தலைமையிலும், அரூரில் வட்ட செயலாளர் ஷபானா தலைமையிலும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. அரூரில் மாநில துணைத் தலைவர் தமிழ்செல்வி கலந்து கொண்டு பேசுகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மற்ற மாநிலத்தில் வழங்குவதைப் போல தமிழக அரசும் அனைவருக்கும் உதவித்தொகை வழங்கிட வேண்டும். மாதாந்திர உதவி தொகை கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் உடனே மாதாந்திர உதவித் தொகை வழங்கவேண்டும்.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வேலை வழங்கி ஊதியமாக ரூ.319யை குறைக்காமல் வழங்கிட வேண்டும். 8 மணி நேர வேலை செய்ய வேண்டும் என நிர்பந்திக்காமல்
4 மணி நேர வேலை வழங்க வேண்டும். பணிதள பொறுப்பாளர்களை மாற்றி புதியவர்களை பணியில் அமைத்திட வேண்டும்.
என பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் மாவட்ட முழுவதும் 4 இடங்களில் நடந்தது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 543 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.