நாகர்கோவில் – நவ- 19,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாரில் உலக பிரசித்தி பெற்ற கேட்ட வரும் தரும் புனித சவேரியார் பேராலயம் அமைந்துள்ளது. இந்த பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 24-ஆம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
மேலும் இந்த பேராலய புனரமைப்பு பணிக்காக தமிழ்நாடு அரசின் சிறுபான்மையின நலத்துறை சார்பில் 2 கோடியே 28 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன இந்த புனரமைப்பு பணிகளில் ஒரு கட்டமாக புனித சவேரியார் பேராலயத்தின் திருத்தேர்களை புனரமைக்கும் பணிகளும் நடந்தன.
அதன்படி பேராலயத்தில் உள்ள புனித சவேரியார், செபஸ்தியார், காவல் சம்னசு , ஆகிய மூன்று தேர்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.இந்தப் புதிய தேர்கள் அர்ச்சிப்பு விழா நேற்று காலை சவேரியார் பேராலயத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பங்குத்தந்தை பஸ்காலிஸ் புதிய தேர்களை அர்ச்சிப்பு செய்து வைத்தார். மாநகராட்சி மேயர் மகேஷ் சிறப்பு விருந்தினராக விழாவில் கலந்து கொண்டார். உதவி பங்கு தந்தை ஷாஜன் செசில், பங்கு பேரவை துணைத் தலைவர் ஜேசு ராஜா , துணைச் செயலாளர் ராஜன் ஆராச்சி, பொருளாளர் ஜார்ஜ் பிரகாஷ் ராபின் மற்றும் ஏராளமான பங்கு பேரவை மக்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். புதிதாக தேக்கு மரத்தால் செய்யப்பட்டுள்ள ” சவேரியார் தேர் 33 அடி உயரத்திலும் ” , ” செபஸ்தியார் தேர் 17 அடி உயரத்திலும் ” , மற்றும் ” காவல் சம்மனசு தேர் 15 அடி உயரத்திலும் ” , செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புதிதாக செய்யப்பட்டுள்ள தேர் தற்போதைய திருவிழாவில் 8, 9 மற்றும் 10- ஆம் திருவிழாவின் போது மூன்று புதிய தேர்களும் தேர் பவனிக்கு பயன்படுத்தப்படுவதாக பங்கு பேரவையினர் மற்றும் நிர்வாகிகள் கூறினர் .