தென்காசி இ.சி.ஈஸ்வரன்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் 3 வது பொதிகை புத்தகத்திருவிழாவினை முன்னிட்டு ரோலர் ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பிரச்சார பயணத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பிற்கிணங்க புத்தகவாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்து செல்ல தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தென்காசி மாவட்டத்தில் 3 வது பொதிகை புத்தகத்திருவிழா துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. 15.11.2024 முதல் 24.11.24 வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது . இதனை முன்னிட்டு புத்தகதிருவிழாவில் மாணவ/மாணவிகள் மற்றும் பொதுமக்கள் புத்தகத்தினை வாங்கி வாசிப்பின் அவசியத்தை விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் தென்காசி மாவட்டம் கடையத்தினை அடுத்த இரவணசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த மளிகை கடை ஊழியரான முகம்மது நஸீருதீன்-ஜலிலா தம்பதிகளின் மகள்கள், குற்றாலம் செய்யது மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு பயிலும் மாணவி சாதனைச்சுடர் விருது பெற்ற ஷாஜிதா ஜைனப், வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் யோகா இயற்கை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் முதலாம் ஆண்டு மாணவி ( பி.என்.ஒய்.எஸ்) சிங்கப்பெண் விருது பெற்ற மிஸ்பா நூருல் ஹபிபா ஆகியோர் ரோலர் ஸ்கேட்டிங் மூலம் கைகளில் தேசியக்கொடி மற்றும் புத்தகத்துடன் பிரச்சார பயணத்தை மேற்கொண்டனர்.
இப்பயணம் புதிய பேருந்து நிலையம்,பழைய பேருந்து நிலையம் வந்து யானைப்பாலம் வழியாக குற்றாலம், செங்கோட்டை காவல்நிலையம் வரை சென்று நிறைவு பெற்றது. பிரச்சாரத்தை மேற்க்கொண்ட சகோதரிகள் ஷாஜிதா, மிஸ்பா யோகாவில் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றும் யோகா, ஸ்கேட்டிங்கில் தொடர்ந்து பல சமூக விழிப்புணர்வுகளை ஏற்ப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணி,செய்யது பள்ளி முதல்வர் /முனைவர்.பாதுஷா, உடற்கல்வி ஆசிரியர்கள் சுப்பிரமணியன், இஸ்மாயில், யோகா/ ஸ்கேட்டிங் விளையாட்டு பயிற்சி ஆசிரியர் குரு கண்ணன், அரசு உயர் அலுவலர்கள், மாணவிகளின் குடும்பத்தினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.