நாகர்கோவில் செப் 28
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடிவீஸ்வரம் பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா திடீர் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து தரப்பட்ட பொதுமக்களுக்கும் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வரும் அனைத்து நலத்திட்ட உதவிகள் கிடைத்திட வேண்டுமென பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடிவீஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள கால்நடை பல்நோக்கு மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து, திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக கால்நடைகளான கோழிகள், ஆடுகள், பசுக்கள், நாய்கள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்தும், குடற்புழு நீக்குவதற்கு கால்நடைகளுக்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் கேட்டறியப்பட்டது. மேலும் பசு மற்றும் எருமைகளுக்கு செயற்கை முறையில் கருவூட்டல் குறித்தும் கேட்டறியப்பட்டது.
அதனைத்தொடர்ந்து வடிவீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, மாணவ மாணவியர்களுக்கு முதலமைச்சர் காலை உணவு திட்டம், கற்றல் முறைகள் குறித்து மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடப்பட்டதோடு, அங்கன்வாடி மையம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நடைபெற்ற ஆய்வில் துறை அலுவலர்கள் மருத்துவர்கள், பணியாளர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.