பரமக்குடி, ஜூலை.9: பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் மற்றும் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரி வாயில் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் உள்ள 126 கல்லூரிகளில் சுமார் 7000 திற்கு மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் கடந்த 15 வருடங்களுக்கு மேல் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தொடர்ந்து தமிழக அரசிடம் கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி நிரந்தரம், அரசு ஆணை 56, யு ஜி சி நிர்ணயம் செய்துள்ள ரூ. 50,000 மற்றும் உதவி பேராசிரியர் பணி இடத்திற்கு 2019 அரசாணையை பின்பற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு யுஜிசி நிர்ணயம் செய்துள்ள சம்பளம் ரூ.50,000 மற்றும் நிலுவைத் தொகை வழங்க வேண்டும் , அரசாணை 56 யை நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு உள்ளதை நடைமுறைப்படுத்த வேண்டும். நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பரமக்குடி அரசு கலை, கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் வாயில் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.