கன்னியாகுமரி ஜூன் 28
களியக்காவிளை காவல் நிலையம் அருகே உள்ளது ஓட்டமரம் பகுதி. இது குமரி-கேரள எல்லை. இங்கு நேற்று இரவு 11.30 மணியளவில் கேரளா பதிவு எண் கொண்ட சொகுசு கார் ஒன்று நீண்ட நேரம் சாலையோரம் நின்று கொண்டிருந்தது.சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், கார் அருகே சென்று பார்த்தனர். அவர்கள் காருக்குள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதாவது காரின் ஓட்டுனர் இருக்கையில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். காரில் இருந்த சடலத்தின் கழுத்து கொடூரமாக வெட்டப்பட்டது.கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். பின்னர் கொலை செய்யப்பட்டது யார்? கொலையின் பின்னணி? விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவரின் ஆதார் அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம் காரில் சிக்கியது.அதை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தியபோது, இறந்தவர் திருவனந்தபுரம், கைமனம் பகுதியை சேர்ந்த சோமன் மகன் தொழிலதிபர் தீபு (வயது 41) என்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் பாப்பனம்கோடு கைமனம் பகுதிக்கு சென்று உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.இதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. கொலை செய்யப்பட்ட தீபுவிற்கு வேது மோள் (40) என்ற மனைவியும், மாதவ் மற்றும் மானசு என்ற 2 மகன்களும் உள்ளனர். மனைவி பாலக்காடு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். தீபு திருவனந்தபுரத்தில் கல்குவாரி நடத்தி வந்தார். பொக்லைன் இயந்திரங்களை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்தார். கல்குவாரி 2 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. அதன் பிறகு கல்குவாரியை மீண்டும் திறக்கும் பணியை மேற்கொண்டு வந்தார்.இதற்கிடையில் நேற்று புதிய பொக்லைன் இயந்திரம் வாங்க ரூ.10 லட்சத்துடன் மதுரைக்கு காரில் புறப்பட்டார். இந்நிலையில்தான் குமரி மாவட்டத்தில் காருக்குள் கொடூரமாக கொல்லப்பட்டார். ரூ.10 லட்சம் பணமும் காணவில்லை. தீபு வழியில் ஒருவரை காரில் ஏற்றிச் சென்றதாக கூறப்படுகிறது.அந்த மர்ம நபர் அவரை கொன்று பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. இது தொடர்பான சில தடயங்கள் போலீசாரிடம் சிக்கியுள்ளன. மேலும் இதுகுறித்து களியக்காவிளை போலீஸார் வழக்குப் பதிந்து, பணம் பறிக்கும் நோக்கத்தில் இந்தக் கொலை நடந்ததா? அல்லது தொழில்முறை போட்டியால் அவர் கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இக்கொலையில் ஈடுபட்ட நபரை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொடூரமாக கொல்லப்பட்ட தீபு கேரளாவை சேர்ந்தவர் என்பதால் கேரள போலீசாரும் இந்த வழக்கை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். கேரள மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் குமரியில் காருக்குள் வைத்து கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.