நாகர்கோவில், செப். 28:
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் சட்டம் ஒழுங்கு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமை தாங்கி, துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.
கூட்டத்தில், மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்வோரைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கவும், போதைப்பொருட்களுக்கு அடிமையான இளைஞர்களுக்கு உரிய மனநல ஆலோசனை மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 29,208 வழக்குகளும், இருசக்கர வாகனத்தில் விதிகளை மீறி 3 பேர் பயணம் செய்ததாக 1,112 வழக்குகளும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 905 வழக்குகளும், அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 137 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஆகஸ்ட் மாதத்தில் புதிதாக 12 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் தெரிவித்தார். சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வேலுமணி, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஐஸ்வர்யா, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் மாலதி, துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல்துறையினர், ஆணையாளர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



