தேவதானப்பட்டி, செப். 07.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி சிவன் கோவில் மண்டபத்தில், அகில பாரத புஷ்பாஞ்சலி சபரிமலை ஐயப்ப சேவா சங்கம் (PASS), நலம் மருத்துவமனை மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய மாபெரும் மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.
06.09.2026 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில் தேவதானப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டனர். முகாமில் பல்வேறு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் கண் பரிசோதனைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் கேரள தேசத்தின் பந்தளம் அரண்மனை ராஜா, பிரபல பாடகர் சதாசிவம், அகில பாரத புஷ்பாஞ்சலி ஐயப்ப சேவா சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஸ்ரீனிவாச கதிர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மேலும், தேவதானப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.
மருத்துவ முகாமை முன்னிட்டு பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டதுடன், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடையே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமிற்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனர்.
நிகழ்ச்சியின் நிறைவாக, கலந்து கொண்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இம்மாபெரும் மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை தேவதானப்பட்டி ஐயப்ப பக்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.



