தருமபுரி, செப்.04.
தருமபுரி மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் விஜயா மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்று, குழந்தைகளின் நலன், பாதுகாப்பு மற்றும் சிறப்பு சேவைகள் குறித்து அதிகாரிகளுடன் விரிவாக ஆய்வு மேற்கொண்டனர்.
தனியார் பள்ளிகளில் செயல்படும் விடுதிகள் உரிய உரிமைச் சான்று பெற்றுள்ளதை உறுதி செய்யவும், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை முறையாக பின்பற்றவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கட்டண விவரங்களை தகவல் பலகையில் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்றும், பள்ளி வருகைப் பதிவேட்டில் மாணவர்களின் சாதி விவரங்களை குறிப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அரசு நல விடுதிகள், சமூகநலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் செயல்படும் மாணவர், மாணவியர் விடுதிகளில் அட்டவணைப்படி தரமான உணவு வழங்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.



