சிவகங்கை, செப்.04.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே, சிறுகப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பீர்க்கலைக்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி சாத்தப்பனுக்கு சொந்தமான சுமார் 15 ஏக்கர் தோட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென்னை மற்றும் தேக்கு மரங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் 3-ம் தேதி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் தனது அனுமதியின்றி தோட்டத்திற்குள் நுழைந்து, ஜேசிபி இயந்திரம் மூலம் 200-க்கும் மேற்பட்ட தென்னை, தேக்கு மரங்கள் மற்றும் தோட்டத்தைச் சுற்றியிருந்த வேலிகளை சேதப்படுத்தியதாக விவசாயி குற்றம் சாட்டியுள்ளார்.
தோட்டத்தில் ஆக்கிரமிப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தபோது, தான் வெளியூரில் இருப்பதாகவும், முறையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்பு இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டதாக சாத்தப்பன் கூறுகிறார். ஆனால், தனது கோரிக்கையை ஏற்காமல் தோட்டத்திற்குள் நுழைந்து மரங்கள் மற்றும் வேலிகளை சேதப்படுத்தியதால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கண்ணெதிரே தான் பெற்ற பிள்ளைகள் போல் வளர்த்த மரங்கள் அழிக்கப்பட்டதால் மனவேதனை அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், நிவாரணம் கிடைக்காவிட்டால் நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் விவசாயி தெரிவித்துள்ளார்.



