திருப்பத்தூர், ஆக.30 –
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கூட்டமைப்பிற்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. பள்ளியின் தலைமையாசிரியர் விஜியகுமாரி தலைமை தாங்கினார். உடற்கல்வி ஆசிரியர் வீரமணி அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் பேசிய தலைமையாசிரியர், பள்ளி மேலாண்மைக் குழுவில் தலைவர், செயலாளர், கல்வியாளர் மற்றும் உறுப்பினர்கள் என பல்வேறு பொறுப்புகள் உள்ளதாகவும், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சமூக சேவை மனப்பான்மையுடன் இதில் பங்கேற்கலாம் என்றும் தெரிவித்தார். பள்ளி வளர்ச்சி, கட்டிட பராமரிப்பு, மாணவர்களின் ஒழுக்கம், கல்வி, கலை மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாணவர்களை ஊக்குவித்து சிறந்த பள்ளியாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் சித்ரா, கல்வியாளர் ரஜினி ஆகியோர் குழுவின் செயல்பாடுகள் மற்றும் தங்களது முன் அனுபவங்களை பகிர்ந்து வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்ட விழிப்புணர்வு காட்சிகள் மற்றும் படங்கள் பெற்றோர்களுக்கு ஒளித்திரை மூலம் காண்பிக்கப்பட்டன. கூட்டத்தின் முடிவில் கணித ஆசிரியர் விஜியகுமார் நன்றியுரை வழங்கினார்.



