ஈரோடு, ஜூலை 27 –
பெங்களூரு நாராயணா ஹெல்த் சிட்டி கடந்த மூன்று ஆண்டுகளில் 10,000 எலும்பியல் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. மேம்பட்ட மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, எலும்பியல் புற்றுநோய் சிகிச்சை, விபத்து காய சிகிச்சை, முதுகுத்தண்டு சிகிச்சை மற்றும் சிக்கலான மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைகள் ஆகிய துறைகளில் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஈரோடு மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகள் உலகத் தரம் வாய்ந்த எலும்பியல் சிகிச்சையை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ரோபோடிக் உதவியுடன் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகள், அதிநவீன இமேஜிங் தொழில்நுட்பம், தனிப்பயனாக்கப்பட்ட இம்ப்ளாண்ட்கள் மற்றும் முழுமையான மறுவாழ்வு நடைமுறைகளின் ஆதரவுடன், நாராயணா ஹெல்த் சிட்டியின் எலும்பியல் துறை உயர்தர சிகிச்சை அளித்து வருகிறது.
சமீபத்தில், முழங்கால் பகுதியில் தீவிர எலும்புப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமிக்கு, ஜெர்மனியில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு, எதிர்கால உடல் வளர்ச்சிக்கு ஏற்ப விரிவடையும் தன்மை கொண்ட செயற்கை மூட்டு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் சிறுமி முழுமையாக நலமுடன் வாழ்கிறார். இது குறித்து எலும்பியல் துறை மூத்த ஆலோசகர் டாக்டர் சுமன் பைரேகவுடா தெரிவிக்கையில், நவீன இம்ப்ளாண்ட் தொழில்நுட்பங்களால் 90 முதல் 95 சதவீதத்திற்கும் அதிகமான நோயாளிகளுக்கு உறுப்பைப் பாதுகாக்கும் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடிகிறது என்றார்.
அதேபோல, 20 ஆண்டுகளாக இரு முழங்கால்களிலும் மூட்டுவாத பாதிப்பால் அவதிப்பட்டு வந்த 55 வயது பெண்ணுக்கு, அதிநவீன ரோபோடிக் உதவியுடன் முதன்மை முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஒரே நாளில் அவர் உதவியுடன் நடக்கத் தொடங்கி, ஒரு மாதத்திற்குள் சுயமாக நடக்கும் திறனைப் பெற்றார். இது குறித்து எலும்பியல் துறை ஆலோசகர் டாக்டர் பிரதாப் கூறுகையில், ரோபோடிக் சிகிச்சை முறை மூலம் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய வலி குறைவதோடு நோயாளிகள் விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்ப முடிகிறது என்று குறிப்பிட்டார்.
மருத்துவ நிபுணத்துவம், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் பல்துறை மருத்துவ நிபுணர்களின் ஒருங்கிணைந்த அணுகுமுறை மூலம், நாராயணா ஹெல்த் சிட்டி தொடர்ந்து உயர்தர சிகிச்சைகளை வழங்கி சிறப்புமிக்க மருத்துவ மையமாகத் திகழ்கிறது என்று ஆஸ்பத்திரி நிர்வாகிகள் பெருமையுடன் கூறினர்.



