புதுக்கடை, ஜூலை 27 –
புதுக்கடை அருகே உள்ள கீழ்குளம் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் ( 48). இவரது மனைவி கவிதா (38) என்பவர் நெய்யூரில் உள்ள தாதியர் பள்ளியில் வார்டனாக பணியாற்றி வருகிறார். ஸ்டீபன் கடந்த 24ஆம் தேதி இரவு 9 மணி அளவில் தேங்காப்பட்டணம் பகுதியிலிருந்து தனது வீட்டிற்கு சாலையில் இடது பக்கமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது முக்காட்டுவிளை என்ற பகுதியில் வைத்து பின்னால் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் வந்த பைக் ஒன்று நடந்து சென்று கொண்டிருந்த ஸ்டீபன் மீது மோதி தள்ளியது.
இதில் தூக்கி வீசப்பட்ட ஸ்டீபன் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு குழித்தறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவிலிருந்த ஸ்டீபன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அதிகாலை உயிரிழந்தார்.
இது குறித்து கவிதா அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் பைக்கை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய புதுக்கடை அருகே ஆனந்தமங்கலம் பகுதியை சேர்ந்த சஜின் (36) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


