திருப்பூர், ஜூலை 23 –
மாநகராட்சிக்கு உட்பட்ட 8வது வார்டு போயம் பாளையம், நேரு நகர் பகுதியில், அரசுப் பள்ளிக்கு சொந்தமான நிலத்தை தனி நபர் ஆக்கிரமித்துள்ளதாகவும், அதனை உடனடியாக மீட்டு பள்ளிக்கு ஒப்படைக்க வேண்டும் என திமுக கவுன்சிலர் வேலம்மாள் காந்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், போயம் பாளையம் நேரு நகர் பகுதியில் உள்ள பள்ளி நிலத்தை கொண்டாசாமி என்பவர் ஆக்கிரமித்து வைத்துள்ளார். இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து கடந்த 30 ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
கடந்த 5 ஆண்டுகளாக அப்பகுதியில் கவுன்சிலர், வேலம்மாள் காந்தி வருவாய்த்துறை அதிகாரிகளை 546 முறை நேரடியாகச் சந்தித்து மனு அளித்துள்ளார். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கடந்த 2 ஆண்டுகளாகத் தீவிரமாக நடத்தப்பட்ட சட்டப் போராட்டத்தின் விளைவாக நீதிமன்றம் ‘இது முழுக்க முழுக்க அரசு சொத்து’ என்று தெளிவான தீர்ப்பை வழங்கியது.”
நீதிமன்ற தீர்ப்பு வந்து 4 மாதங்கள் ஆகியும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். அப்பள்ளியில் தாய், தந்தை இல்லாத 51-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் உட்பட ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் பயின்று வருகின்றனர். குழந்தைகளுக்கு போதிய கழிப்பிட வசதிகள் இல்லை. காலையில் இறைவணக்கக் கூட்டம் (Prayer) நடத்துவதற்குக் கூட இடம் இல்லாத இக்கட்டான நிலை நிலவுகிறது.
மாநகராட்சி மாமன்றக் கூட்டத்திலும் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர். இந்த மனு மீது நடவடிக்கை எடுத்து 3 நாட்களுக்குள் ஆக்கிரமிப்பை அகற்றி நிலத்தைப் பள்ளிக்கு ஒப்படைக்க தவறினால், பொதுமக்களைத் திரட்டி வீதியில் இறங்கி மாபெரும் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்துள்ளார்.



