மார்த்தாண்டம், ஜூலை 22 –
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே நெல்வேலி மஹா தேவர் கோயில் உள்ளது. இது ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் என கூறப்படுகிறது. தற்போது ஆலயம் அருகே தமிழகம் கேரளாவை இணைக்கும் 4 வழி சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்து அறநிலையத்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அலட்சியத்தால் தற்போது இந்த கோயில் காம்பவுண்டு சுவர் இடிக்கபட வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.
இந்த சாலை பணிகள் துவங்கிய போதே பாஜகவினர் மற்றும் பக்தர்கள், இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி கோயிலுக்கு பாதிப்பு இல்லாத நிலையில் பணிகள் செய்ய வரைபடம் தயார் செய்யப்பட்டது. ஆனால் கோயில் மற்றும் ஆசாராங்களை முடக்கும் வகையில் இந்த பணிகள் தற்போது நடப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதை கண்டித்து இந்து அமைப்புகள், பக்தர்கள் மற்றும் பாஜக மாவட்ட தலைவர் ஆர் டி சுரேஷ் உட்பட்ட பாஜகவினர் அந்த பகுதியில் குவிந்தனர். இதை தொடர்ந்து பணிகள் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கோயிலுக்கு பாதிப்பு இல்லாத அளவில் பணிகள் மேற்கொள்வோம் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.



