தருமபுரி, ஜூலை 22 –
தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் ஆண்டுதோறும் ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஒகேனக்கல் ஆடி பெருக்கு விழா நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சரவணன் ஒகேனக்கல் சென்று அங்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து விழா நடைபெறும் இடம், பரிசல்துறை, முதலைப்பண்ணை, மீன் காட்சி அரங்கம், உணவகம், பொதுமக்கள் குளிக்கும் இடங்கள் ஆகியவற்றை அவர் பார்வையிட்டார்.
அப்போது ஆட்சியர் கூறியதாவது: தமிழ்நாடு அரசு சுற்றுலா துறை சார்பில் ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழா வருகின்ற ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது. இந்த விழாவை சிறப்பாக நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆடிப்பெருக்கு விழா அன்று சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தருவார்கள். எனவே அவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் சுகாதார ஏற்பாடுகள் செய்து கொடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
மின்சாரம் வழங்குதல், தற்காலிக கழிப்பிட வசதிகள் ஏற்பாடு செய்தல், பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல தருமபுரி மற்றும் பென்னாகரத்திலிருந்து ஒகேனக்கல்லுக்கு கூடுதல் போக்குவரத்து வசதிகளை அதிகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்க தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.
ஆடிப்பெருக்கு விழாவின்போது சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசின் பல்வேறு துறைகள் சார்பில் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த கண்காட்சி அரங்குகள் அமைத்திடவும், விழா நடைபெறும் மூன்று நாட்களும் சுற்றுலாத்துறை மற்றும் கலை பண்பாட்டுத்துறை, பள்ளி கல்வித்துறை, உயர் கல்வித்துறை இணைந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது உதவி ஆட்சியர் ஜார்ஜ் , உதவி சுற்றுலா அலுவலர் லவிஷா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன், தாசில்தார் ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர் கல்பனா மற்றும் பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.



