நாகர்கோவில், ஜூலை 21 –
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் என்னும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பற்ற மற்றும் வேலையில்லாத இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் திறன்களை மேம்படுத்த பல்வேறு திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் இத்திட்டத்தின் கீழ் ஹாலோ மொழி மையத்தின் திறன் பயிற்சி அளிப்போரால் செவிலியர் மாணவர்களுக்கு ஜெர்மன் மொழிப் பயிற்சி கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. இப்பயிற்சியில் 45 மாணவர்கள் கலந்துகொண்டார்கள்.
இப்பயிற்சியில் மாணவர்களுக்கு ஜெர்மன் மொழி சரளமாக பேச, கேட்க, எழுத மற்றும் மருத்துவ சம்பந்தமான சொற்கள் குறியீடுகள், தகவல் சேகரிக்க உள்ளிட்ட மருத்துவ பணிகளுக்கு தேவையான அனைத்து பயிற்சிகளும் வழங்கப்பட்டது. மொழி பயிற்சியானது ஏ1, ஏ2, பி1, பி2 என நான்கு நிலைகளிலும் பயிற்சியினை முடித்த 6 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப் சான்றிதழ் வழங்கி கூறுகையில்: சான்றிதழ் பெற்ற அனைவருக்கும் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் தற்போது இப்பயிற்சியின் மூலம் ஜெர்மன் செல்லும் வாய்ப்பினை பெற்றுள்ளார்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் திறன்மேம்பாட்டு பயிற்சி லட்சுமிகாந்தன், மாவட்ட திறன் அலுவலர் கி.ராஜிகா, பயிற்றுநர்கள், துறை அலுவலர்கள், செவிலிய மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



