நாகர்கோவில், ஜூலை 20 –
கன்னியாகுமரியை அடுத்த அஞ்சுகிராமம் அருகேயுள்ள மருங்கூர் பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மகன் டிராவிட் (22) பிஎஸ்சி பட்டம் பெற்றவர். நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் எலக்ட்ரீசியன் ஆக வேலை செய்து வந்தார். மருங்கூர் பகுதியை சேர்ந்தவர் ராமன் மகன் நாகராஜன் (22). இவர் இன்ஜினியரிங் முடித்துள்ளார். தற்போது வேலை தேடி வந்துள்ளார்.
டிராவிட், நாகராஜன் இரண்டு பேரும் நண்பர்களாவார்கள். இந்த நிலையில் நேற்று இரவு நாகராஜன் தனது நண்பருடைய விலை உயர்ந்த பைக்கில் நாகராஜன், ட்ராவிட் ஆகியோர் இரவிபுதூரிலிருந்து மயிலாடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். பைக்கை நாகராஜன் ஓட்டினார். டிராவிட் பின்னர் அமர்ந்திருந்தார்.
அப்போது மயிலாடி அருகே நாச்சியார் குளம் என்ற இடத்திற்கு சென்ற போது திடீரென நிலை தடுமாறிய பைக் தறிகெட்டு ஓடி, அங்குள்ள 60 அடி பள்ளத்தில் விழுந்தது. பள்ளத்தில் தண்ணீரும் இருந்துள்ளது. பைக்கில் இருந்து விழுந்ததில் இரண்டு பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
இதை அடுத்து அந்த வழியாக வந்தவர்கள் 2 வாலிபர்களின் சத்தம் கேட்டு, உடனடியாக கன்னியாகுமரி தீயணைப்பு நிலையம் மற்றும் அஞ்சு கிராமம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் 60 அடி பள்ளத்துக்குள் கிடந்த வாலிபர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்பட்டதால், அதிக வெளிச்சம் கொண்ட லைட் கொண்டுவரப்பட்டு, மீட்பு பணி நடைபெற்றது. இதை அடுத்து தீயணைப்பு இவர்கள் 2 வாலிபர்களை மீட்டுனர். பின்னர் போலீசார் 2 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் டிராவிட், நாகராஜன் ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து அஞ்சுகிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


