நாகர்கோவில், ஜூலை 16 –
நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் 14ம் தேதி அதிகாலை 2 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. தீயணைக்கும் பணியில் மாவட்ட தீயணைப்பு அதிகாரி சத்தியகுமார் தலைமையில் உதவி மாவட்ட அதிகாரி துரை மேற்பார்வையில் 60 தீணைக்கும் வீரர்கள் முதல் நாளில் பணியில் ஈடுபட்டனர். மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு குப்பைகள் கிளறி விடப்பட்டது. மேலும் தண்ணீரும் தேவைக்கு ஏற்ப வழங்கப்பட்டது. ஒரு கட்டத்தில் காற்றின் வேகம் அதிகரித்ததால் தீயின் வேகம் அதிகரித்தது. இதனால் தண்ணீர் தேவை அதிகரித்தது.
தொடர்ந்து நேற்று 2வது நாளாக கூடுதலாக தீயணைப்பு வீரர்கள் வர வைக்கப்பட்டனர். மொத்தம் 100 தீயணைப்பு வீரர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் பாதாள சாக்கடை மூலம் வரும் கழுவு நீர் சுத்திகரிப்பு பகுதியில் இருந்து தண்ணீர் பம்பிங் செய்து தீயணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர். நேற்று மாலை தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, இரவு 8 மணிக்கு தீயை முற்றிலும் அணைத்தனர்.
இந்த நிலையில் இன்று காலை குப்பை கிடங்கில் சில இடங்களில் இருந்து புகைகள் வெளியேறியது. உடனே மாநகராட்சி ஊழியர்கள் அந்த பகுதியில் தண்ணீர் பீச்சியடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் சில தீயணைப்பு வீரர்களும் புகைவரும் இடங்களில் தண்ணீர் அடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வலம்புரி விளை கிடங்கில் தீப்பிடித்ததால் சுமார் 5 முதல் 7 நாட்கள் வரை போராடி தீயணைக்கப்பட்டு வந்தது. தற்போது தீப்பிடித்த 2 நாட்களில் அணைத்ததால் குப்பை கிடங்கை சுற்றி உள்ள மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.



