நாகர்கோவில், ஜூலை 7 –
நாகர்கோவிலில் இருந்து ராஜாக்கமங்கலம் நோக்கி நேற்று இரவு டாரஸ் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. எறும்புக்காடு அருகே வைத்து எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடும்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி லாரி கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த ஜல்லிகள் சாலையில் சிதறின. டிரைவர் படுகாயத்துடன் தப்பினார்.
இந்த விபத்து குறித்து அறிந்ததும் ஆசாரிப்பள்ளம் மற்றும் ராஜாக்கமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த டிரைவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரி மோதியதில் மின்கம்பம் உடைந்தது மின் ஒயர்கள் அறுந்து விழுந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மேலும் எறும்புகாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்கள் இருளில் மூழ்கின. மின்வாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொடர்ந்து அந்த பகுதியில் மீட்பு பணியை நடத்தினர். இன்றும் மீட்பு பணி தொடர்ந்து நடந்தது. விபத்துக்கான காரணம் குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



