திருப்பத்தூர், ஜூலை 1 –
அரசு மருத்துவ மனைகளில் பணிபுரிய மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு பெற்ற 1100 மருத்துவர்களில் மதிப்பெண் அடிப்படையில் முதல் 320 மருத்துவர்களுக்கு சென்ற மார்ச் 10-ஆம் தேதி கலந்தாய்வு மூலம் பணியிடம் தேர்வு செய்து பணி ஆணை வழங்கப்பட்டது. மீதமுள்ள 780 மருத்துவர்களுக்கு தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி பணி ஆணை வழங்கவில்லை.
புதிய ஆட்சி வந்த பிறகு, மீதமுள்ளவர்களுக்கு பணி ஆணை வழங்க கோரிக்கை முன்வைக்கப்பட்டதன் அடிப்படையில் ஜூன் 4 ஆம் நாள் 395 மருத்துவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுவிக்கப்பட்டு கலந்தாய்வு நடத்தி பணியிடத்தை தேர்வு செய்தனர். அதன் பிறகு 27.6.2026 அன்று 350 மருத்துவர்கள் கலந்தாய்வு மூலம் பணியிடத்தை தேர்வு செய்தனர். ஆனால் பணியில் சேர பணிஆணை வழங்கவில்லை. அரசு மருத்துவர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும் பணி ஆணை வழங்காமல் தாமதமாவதால் வேறுபணிக்கும் செல்ல முடியாமல் 745 மருத்துவர்கள் 4 மாதமாக மன உளைச்சலில் உள்ளனர்.
இதுகுறித்து சென்னை பொது சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது முதல்வர் விஜய், மேற்கண்ட 745 மருத்துவர்களுக்கும் நேரடியாக பணி ஆணை வழங்க உள்ளதால் முதல்வர் விஜய்யின் நேரம் மற்றும் நாள் ஒதுக்கீடு கிடைத்த பிறகு 745 மருத்துவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படும் என்ற தகவலை தெரிவித்தனர். மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பிறகு கடந்த நான்கு மாதமாக ஆணை பெறாமல் உள்ளனர்.
பணிஆணை வழங்கப்படாமல் உள்ள 745 மருத்துவர்களுக்கு இனியும் தாமதிக்காமல் முதல்வர் விஜய், உடனே பணி ஆணை வழங்கவேண்டும் என்று தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கு மேற்கண்ட பணி ஆணை பெறாத மருத்துவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



