நாகர்கோவில், ஜூன் 22 –
நாகர்கோவில் அருகே உள்ள ஈத்தாமொழி பகுதியில் உள்ள ஒரு தனியார் தென்னந்தோப்பில் ரவுடி கும்பல் மது பார்ட்டியுடன் கிடா விருந்து கொண்டாட்டத்தில் இருப்பதாக குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலினுக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து தனிப்படை போலீசார் அந்த பகுதிக்கு விரைந்தனர். தென்னந்தோப்பில் இருந்தவர்கள் போலீசாரை பார்த்ததும் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். ட்ரோன் உதவியுடன் அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். இதில் 51 பேர் சிக்கினர்.
குமரி மாவட்டம் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் இந்த விருந்துக்கு வந்து இருந்தனர். நண்பர் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளதால் அந்த மகிழ்ச்சியை கொண்டாட வந்ததாக கூறினார்கள். பிடிபட்ட 51 பேரில் 23 பேர் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் பட்டியலில் உள்ளவர்கள் ஆவார்கள். இதில் நாகர்கோவில் அருகே உள்ள நங்கூரன் பிலாவிளையை சேர்ந்த லிங்கராஜா (46) என்பவரும் அடங்குவார்.
பிடிபட்டவர்களை காவல் நிலையத்தில் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். இதில் லிங்கராஜா மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பதும், ஈத்தாமொழி காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளிகள் பட்டியலில் சி பிரிவில் இருப்பதும் தெரிய வந்தது. மேலும் சசி என்பவரை மிரட்டி பணம் பறித்ததாக புகார் இருந்தது. இந்த புகாரின் பேரில் லிங்கராஜாவை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.



