திருப்பூர், ஜூன் 19 –
திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (ஆர்.டி.ஓ.) லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத 81,500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இடைத்தரகர்கள் நடமாட்டம் மற்றும் லஞ்சப் புகார்கள் தொடர்பாகப் பெருமளவில் புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் மொத்தம் 45 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாக, பல்லடத்தில் இருந்து திருப்பூர் செல்லும் ரோட்டில் வீரபாண்டி பிரிவில் அமைந்துள்ள திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் மற்றும் இன்ஸ்பெக்டர் சசிலேகா ஆகியோர் தலைமையில் வந்த 7 பேர் கொண்ட குழுவினர், நேற்று பிற்பகல் 12:00 மணி அளவில் அலுவலகத்திற்குள் புகுந்து சோதனையைத் தொடங்கினர்.
அலுவலகத்தின் அனைத்துக் கதவுகளும் மூடப்பட்டு, உள்ளே இருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது, ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் இருந்த புரோக்கர்களிடம் இருந்து கணக்கில் வராத 81,500 ரூபாய் ரொக்கப் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.
இந்த லஞ்சப் பணம் யாருக்காக வாங்கப்பட்டது, இதில் எந்தெந்த அதிகாரிகளுக்குத் தொடர்புள்ளது என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடந்த இந்த திடீர் லஞ்ச ஒழிப்புச் சோதனை திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



