சேலம், ஜூன் 16 –
ஒரு வருவாய் கிராமத்தில் 1 வருடத்தில் பெறப்பட்ட வருவாய் இனங்களுக்கான நிலவரி, தண்ணீர் வரி, கூடுதல் தண்ணீர் வரி, மீன் வள வாடகை, விற்பனை மற்றும் 2. சி பட்டா மர வரி மற்றும் இதர கணக்குகளை கிராம நிர்வாக அலுவலர்கள் அப் பசலியின் இறுதிக்குள் சமர்ப்பிக்க ஜமாபந்தி முறை முன்னுரிமை தருகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 16.06.2026 முதல் 24.06.2026 வரை 1435 பசலிக்கான வருவாய் தீர்வாயம் நடைபெற உள்ளது.
இதில் பொதுமக்கள் பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை பட்டா, வாரிசு சான்று, பிறப்பு மற்றும் இறப்புச் சான்று, குடும்ப அட்டை, சாதி சான்று, வருமானச் சான்று, முதல் பட்டதாரி சான்று, இருப்பிட சான்று, ஆதரவற்ற விதவை சான்று, கணினி சிட்டா பெயர் திருத்தம், மின்சார இணைப்பு, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, விதவை உதவித்தொகை, நில அளவை, குடிநீர், பொது சுகாதாரம், தெரு விளக்கு, சாலை வசதி, பசுமை வீடு, சிறு குறு விவசாயி சான்று, அரசு புறம்போக்கில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் மற்றும் இதர மனுக்களையும் விண்ணப்பித்து பயன்பெற வழிமுறை செய்யப்பட்டுள்ளது.
ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று 16.6.20026, 17.6.20026 மற்றும் 18.6.2026 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது. இன்றைய வருவாய் தீர்வாயதில் இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல், முதியோர் ஓய்வூதியம், குடும்ப அட்டைகள், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு மனுக்களை பெற உள்ளது.
அதன்படி இன்றைய தினம் ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஓமலூர் குறுவட்டம் உமாரமங்கலம் கிராமத்திற்கு உட்பட்ட பி. காளிப்பட்டி, கட்ட பெரியாம்பட்டி, உமாரமங்கலம், கருப்பணம்பட்டி, டி. மாரமங்கலம் கிராமத்திற்கு உட்பட்ட டி. மாரமங்கலம், தொளசம்பட்டி, குக்கிராமங்கள், பெரியேரிப்பட்டி, ரெட்டிபட்டி குக்கிராமங்கள், பச்சனம்பட்டி கிராமத்திற்கு உட்பட்ட திண்டமங்கலம், பச்சனம்பட்டி குக்கிராமங்கள், எம். செட்டிப்பட்டி கிராமத்திற்கு உட்பட்ட எம் .செட்டிப்பட்டி, சிக்கனம்பட்டி குக் கிராமங்கள். பல் பாக்கி, காமலாபுரம், கோட்ட மேட்டுப்பட்டி, குள்ளம நாயக்கன்பட்டி குக்கிராமங்கள் மற்றும் கருப்பூர் குறுவட்டம் சக்கரசெட்டிப்பட்டி, கிராமத்திற்கு உட்பட்ட சக்கரசெட்டிபட்டி மற்றும் கோபிநாதபுரம் ஆகிய குக்கிராமங்களுக்கு நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் உதவித்தொகை, வகுப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 288 மனுக்கள் பெறப்பட்டது.
பெறப்பட்ட மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு தகுதியுடைய மனுக்கள் மீது உடனடி தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்று சேலம் மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து வருவாய் தீர்வாய ங்களிலும் தொடர்புடைய அலுவலர்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது தனி கவனம் செலுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த நில அளவை கருவிகளை பார்வையிட்டார். அதை தொடர்ந்து தோட்டக்கலைத்துறை, வேளாண்மை துறை மற்றும் புதிய வேளாண் பொறியியல் துறை ஆகிய துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.



