மார்த்தாண்டம், ஜூன் 6 –
மார்த்தாண்டம் அருகே மஞ்சாணி விளை என்ற இடத்தை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி ஐஸ்வர்யா (29). இவர் தனது வீட்டில் கேஸ் இல்லாத காரணத்தால் சமையல் செய்வதற்காக விறகு அடுப்பில் சமையல் வேலை செய்துள்ளார். அப்போது விறகுகள் ஈரமாக இருந்ததால் மர வேலைக்கு பயன்படுத்தும் டர்பன் ஆயிலை விறகின் மேல் ஊற்றி எரிக்க முயற்சித்துள்ளார்.
இதில் அவரது சேலை மீது டர்பன் ஆயில் கொட்டி உள்ளது. இதை தெரியாத ஐஸ்வர்யா தீயை அடுப்பில் கொளுத்திய போது, அவர் மீது தீ பற்றி எரிந்து உள்ளது. இதனால் அவருக்கு படுகாயம் ஏற்பட்டு சத்தம் போட்டு உள்ளார். அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், மேல் சிகிச்சைக்காக கேரள மாநிலம் நெய்யாற்றின் கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த ஐஸ்வர்யா சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஐஸ்வர்யாவின் தந்தை கிருஷ்ணகுமார் என்பவர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


