தஞ்சாவூர், ஜூன் 3 –
தஞ்சாவூர் அருகே நெல் கொள்முதல் நிலையம், அரிசி ஆலைகள் கலெக்டர் ரேவதி ஆய்வு செய்தார். தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு கோடை குறுவை பருவத்தில் அறுவடை செய்யப்படும் நெல்லை கொள்முதல் செய்ய 126 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதுவரை 10,471 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 8,094 டன் நெல் இயக்கம் செய்யப்பட்டு சேமிப்பு நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் தஞ்சாவூர் அருகே தளவாய் பாளையத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் நெல் கொள் முதல் செய்யும் பணிகளை கலெக்டர் ரேவதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நாள்தோறும் விவசாயிகளிடம் இருந்து கொண்டு வரப்படும் நெல்லின் அளவு குறித்தும், கொள்முதல் செய்யப்படும் நெல்லின் அளவு குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும் அவர் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம், கணக்கீடு, எடை அளவு, பணிகளை யும் பார்வையிட்டு ஆய்வு செய்தார் அதை தொடர்ந்து அவர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள அனைத்து நெல்லையும் உடனே இயக்கம் செய்து சேமிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
பின்னர் அம்மன் பேட்டையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான நவீன நெல் அறவை ஆலையை கலெக்டர் ரேவதி பார்வையிட்டு நாள்தோறும் 100 டன் நெல் அரவை மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் அவர் சேமிப்பு நிலையங்களில் இருந்து கொண்டு வரப்படும் நெல்லின் அளவு குறித்தும் அவை அரிசியாக மாற்றுவதற்காக செயல்படுத்தப்படும் நடைமுறைகளான அவியல் பகுதி, அரிசியிலிருந்து கருப்பரிசி உள்ளிட்டவைகளை பிரித்து எடுக்கும் பகுதி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் பொது மக்களின் பயன்பாட்டிற்காக அரவைச் செய்து அனுப்பப்படும், அரிசி அனைத்தும் உரிய முறையில் உயர்ந்த தரத்துடன் அறவை பணிகளை மேற்கொண்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தினார். ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலக தியாகராஜன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் செல்வம், துணை மேலாளர் இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.



