தூத்துக்குடி, மே 18 –
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 450 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, பயனாளிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இன்று நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டுதல், தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 410 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்கள் மீது உரிய காலத்திற்குள் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். கூட்ட அரங்கு பகுதிக்கு வர இயலாத மாற்றுத்திறனாளிகளை ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளைக் கனிவுடன் கேட்டறிந்தார். அவர்களிடம் இருந்து பல்வேறு தேவைகள் அடங்கிய 40 கோரிக்கை மனுக்கள் தனியாகப் பெறப்பட்டன. மனுக்கள் மீது உடனடி தீர்வாக, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.1,01,800 மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டது.
மேலும், கடந்த வாரம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்த 7 நபர்களுக்கு உடனடித் தீர்வாக, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தின் கீழ் வாங்கும் திறனுக்கேற்ற வீடுகள் கட்டும் திட்டம் தலா ரூ.9.63 லட்சம் மதிப்பீட்டிலான குடியிருப்பு ஒதுக்கீடு ஆணைகளை ஆட்சியர் விஷு மகாஜன் வழங்கினார். இதன் மொத்த மதிப்பு ரூ.67.41 லட்சம் ஆகும்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மூ.குருச்சந்திரன், தனித்துணை ஆட்சியர் ச.பா.தி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செந்தில்வேல் முருகன், உதவி இயக்குநர் ஊராட்சிகள் சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரமநாயகம், துணை ஆட்சியர் பயிற்சி மகேந்திரன் மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



