மார்த்தாண்டம், மே 16 –
குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பயணியிடம் ஒரு கிலோ 400 கிராம் தங்கம் கொள்ளை போனது. குழித்துறை ரயில்வே போலீசார் தங்கத்தை தவறவிட்ட பயணியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலம் குருவாயூரிலிருந்து சென்னைக்கு நேற்று இரவு புறப்பட்ட குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் திருச்சூர் மாவட்டம் ஒல்லூர் பகுதியை சேர்ந்த ஜோஸ் என்பவர் சுமார் ஒரு கிலோ 400 கிராம் தங்கத்துடன் ரயிலில் ஏறி திருநெல்வேலிக்கு செல்வதற்காக சென்றுள்ளார்.
இரவு நேர பயணம் என்பதால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அவர் இன்று காலை குமரி மாவட்டம் குழித்துறை ரயில் நிலையம் வந்தபோது உறக்கம் கலைந்து எழும்பி பார்த்தபோது தன்னுடன் எடுத்து வரப்பட்ட தோள் பை காணமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அங்கும் இங்கும் தேடி பார்த்து எங்கும் காணாததை தொடர்ந்து குழித்துறை ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து இறங்கி ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் ரயில்வே போலீசார் ரயில்வே நிலையத்தை சுற்றிலும் சோதனை செய்தனர். தொடர்ந்து திருட்டு குறித்து சந்தேகப்படும்படி எந்தவித முகாந்திரமும் இல்லாததை தொடர்ந்து போலீசார் புகார் தாரரான ஜோஸிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையில் நகையை இழந்த நபர் தங்க கட்டிகளை எடுத்து வந்து திருநெல்வேலி பகுதியில் உள்ள நகை செய்பவர்களிடம் கொடுத்து நகையாக செய்து எடுத்து சென்று விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்து வந்ததாகவும், இதேபோல் இந்தமுறை எடுத்து வந்த நகை திருட்டு போனது என்று கூறி உள்ளார்.
இதனையடுத்து ரயில்வே போலீசார் ஜோஸ் ரயிலில் ஏறிய இடத்தில் இருந்து நகை காணாமல் போன இடம்வரை உள்ள பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


