நாகர்கோவில், மே 11 –
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி படு தோல்வி அடைந்துள்ளது. குமரி மாவட்டத்தில் 5 தொகுதலில் தாமரை சின்னம் களமிறங்கியது. ஆனால் ஐந்து தொகுதிகளிலும் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இதற்கிடையே சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு கட்சியின் மாநில தலைமை மற்றும் நிர்வாகிகள் குறித்து குமரி மாவட்ட கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் சிலர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
குறிப்பாக முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் வந்தன.
இந்த நிலையில் கட்சியின் மாநில தலைமை குறித்தும் கட்சிக்காக பணியாற்றியவர்கள் மீதும் சமூக வலைத்தளங்களில் அவதூறுகளை பரப்பி கட்சிக்கு களங்கம் விளைவித்ததாக, குமரி கிழக்கு, மேற்கு மாவட்ட பகுதிகளை சேர்ந்த சார்ந்த 8 பேரை கட்சியிலிருந்து நீக்கி மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் உத்தரவிட்டார்.
அதன்படி குமரி மேற்கு மாவட்ட துணைத் தலைவர் பவானி எஸ்.எம்.எட்வின் ஜோஸ், கன்னியாகுமரி கிழக்கு இளைஞர் அணி மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் ஏ.ஆர்.அருண், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பகுதியை சேர்ந்த பாரதிய ஜனதா உறுப்பினர் ஆர்.ராஜகுமார், சிபின் குமார், பாலமுருகன், எஸ்.சரண்குமார், டி.சுரேஷ் குமார் செல்வ அருண் ஆகியோர் கட்சி பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மேற்கண்ட நபர்களிடம் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். இதற்கிடையே கட்சியின் சமூக வலைதள பதிவுகளை மாநில தலைமை கண்காணித்து வருகிறது. இதன் பேரில் மேலும் பல நிர்வாகிகள் நீக்கப்படலாம் என கூறப்படுகிறது.


