விளாத்திகுளம், ஏப்ரல் 30 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் கடந்த 20ம் தேதி சித்திரைத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார். மீனாட்சி சுந்தரேஸ்வரரின் திருக்கல்யாண வைபவம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து கோவில் நிலையத்திலிருந்து கிளம்பிய திருத்தேரில் மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிரியாவிடைநாயகி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்தனர்.
திருத்தேரினை விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அரோகரா கோசம் விண்ணைப்பிளக்க வடம் பிடித்து நான்கு ரதவீதி வழியாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரினை இழுத்து வந்தனர்.
திருத்தேரில் வீதி நெடுகிலும் வலம் வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு பக்தர்கள் தேங்காய், பழம் உடைத்து வழிபாடு நடத்தினர். 10-ம் திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு விளாத்திகுளம் காவல் உட்கோட்டத்துக்குட்பட்ட சுமார் 100-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.



