மார்த்தாண்டம், ஏப். 27 –
தமிழ் பெரும் புலவர் தொல்காப்பியரின் 2,737 வது பிறந்த தின விழா மே 1 ல் காப்புக்காட்டில் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொல்காப்பிய பாராயணத்துடன் விழா தொடங்குகிறது. காலை 9 மணிக்கு தமிழ்நாடு அரசு மற்றும் தொல்காப்பியர் அறக்கட்டளை சார்பில் தொல்காப்பியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கான கலை இலக்கியப் போட்டிகள் நடைபெறுகிறது.
இப்போட்டிகளை தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் போதுமணி தொடங்கி வைக்கிறார். கே.ஜி. முதல் 2 ம் வகுப்பு வரை ஓவியப் போட்டிக்கான தலைப்பு ‘ இந்திய தேசியக் கொடி’, 3 முதல் 5ம் வகுப்பு வரை ஓவியப் போட்டிக்கான தலைப்பு ‘காப்புக்காடு தொல்காப்பியர் சிலை’, 6 முதல் 8ம் வகுப்பு வரை பேச்சுப் போட்டிக்கான தலைப்பு ‘தொல்காப்பியத்தில் அறிவியல்’, 9 முதல் 10ம் வகுப்பு வரை கட்டுரைப் போட்டிக்கான தலைப்பு ‘ எழுத்துப் பிறப்பில் தொல்காப்பியம்’, 11 முதல் 12ம் வகுப்பு வரை கட்டுரைப் போட்டிக்கான தலைப்பு ‘தொல்காப்பியம் உணர்த்தும் வாழ்வியல் நெறிகள்’, கல்லூரி நிலைக்கான பேச்சுப் போட்டி தலைப்பு ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியர்’ மற்றும் அனைவருக்கும் பொதுவாக ‘தொல்காப்பியம்’ என்னும் தலைப்பில் வினாடி வினாப் போட்டியும் நடைபெற விருக்கிறது.
பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் விருது வழங்கும் விழாவுக்கு அறக்கட்டளை தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்குகிறார். உயர் நீதிமன்ற மதுரை கிளையின் நீதியரசர் விக்டோரியா கௌரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழறிஞர்கள் இர. தேன்மொழி, அனைத்திந்தியத் தமிழ்ச்சங்கப் பேரவை இணைச் செயலாளர் மற்றும் முனைவர் சு. தாமரைப் பாண்டியன், முதுநிலை ஆராய்ச்சியாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஆகியோருக்கு தொல்காப்பியர் அறக்கட்டளை விருதினை வழங்குகிறார்கள்.
வீரமாமுனிவர் பேச்சாளர் பேரவை தலைவர் ஆன்றோ சிறப்புரை வழங்குகிறார். துத்துக்குடி துறைமுகக் கழக பொறுப்பாளர் கேப்டன் பென்னட் சிங் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்குகிறார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ் வளர்ச்சித் துறையும், தொல்காப்பியர் அறக்கட்டளையும் இணைந்து செய்து வருகிறது.



