நாகர்கோவில், ஏப். 20 –
பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகக்கோடு, கொக்கோட்டுமூலை, குலசேகரம், பாயிக்காடு, புலியிறிங்கி ஆகிய 5 பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலய மக்களிடம், திமுக கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கூறி துண்டு பிரச்சாரம் வழங்கப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. இந்த துண்டு பிரச்சாரம், திருவட்டார் பேரூராட்சி தலைவியின் கணவர் ரமேஷ் என்பவர் தலைமையில் வழங்கியதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த தமிழக வெற்றி கழகம் கட்சி தொண்டர்கள், துண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தி உடனடியாக திருவட்டார் போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருவட்டார் போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள், துண்டு பிரச்சாரம் செய்தவர்களை அழைத்து சென்று திருவட்டார் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது போன்று குழித்துறை மறைமாவட்டம் சார்பில் ஒரு துண்டுப் பிரசுரம் தயார் செய்யப்பட்டு நேற்று ஞாயிறு காலை தேவாலயங்களில் திருப்பலி முடிந்ததும் விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளனர். அந்த நோட்டீஸில் குறிப்பாக, திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்றும், மற்ற கட்சிகள் அனைத்தும் மதவாதக் கட்சிகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறும் செயலாகும் என பங்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தொடந்து இதனைத் தடுக்கக் கோரி குழித்துறை ஆயர் இல்லத்தில் மறை மாவட்ட ஆயரை சந்தித்து புகார் மனு அளிக்க வந்தனர். ஆனால் ஆயர் சந்திக்காத காரணத்தால் போராட்டம் நடத்தினர்.


