நாகர்கோவில், ஏப். 6 –
திமுக தலைவரும், தமிழ்நாடு முதல் அமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாகர்கோவில் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது: உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் சூரிய உதயத்தை பார்க்க வரக்கூடிய மாவட்டம்தான் இந்த குமரி மாவட்டம். இந்த மாவட்டத்தில் உதயசூரியன் ஆட்சி உதிக்க வேண்டும் என்று ஆதரவு கேட்டு உங்களையெல்லாம் நான் பார்க்க வந்திருக்கிறேன்.
2026 சட்டமன்றத் தேர்தல்ல திராவிட முன்னேற்றக் கழகத்தை 7 வது முறையா ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்றால் குமரி மாவட்டத்துல இருக்கக்கூடிய எல்லா தொகுதிகளிலும் நம்ம மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றாகணும். அதற்காக நம்முடைய அந்த வெற்றி, அந்த வெற்றிக்குரிய வேட்பாளர்களை இப்போ உங்க முன்னாடி நான் அறிமுகப்படுத்தப் போறேன்.
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர், மாவட்டச் செயலாளர் ஆர். மகேஷ் திமுக சார்பில் போட்டியிடுகிறார். நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக சட்டமன்ற உறுப்பினராக 2 முறையும், மாநிலங்களவை உறுப்பினராக ஒரு முறையும் மக்கள் பணியாற்றிய ஆஸ்டின், கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி அறிமுகப்படுத்திய வழக்கறிஞர் ராஜேஷ்குமார், குளச்சல் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தாரகை கத்பர்ட், பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆர். செல்வசுவாமி, விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளம் தலைவர் ராகுல் காந்தி அறிமுகப்படுத்திய டி.டி. பிரவீன் ஆகிய வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள்.
குமரி மாவட்டத்திற்கு நாம் பல்வேறு திட்டங்களை உருவாக்கி, பல்வேறு சாதனைகளை நாம் செய்து காட்டியிருக்கிறோம். குமரியில் மீனவர் நலத்திட்டங்கள் ஏராளம் செய்யப்பட்டுள்ளது. இனி மீன்பிடித் தடைக்காலச் சிறப்பு நிவாரணத் தொகை மாதம் 8000 அல்ல, 12,000 ரூபாய் வழங்கப்படும். இனி மீன்பிடி குறைவுகால நிவாரணத் தொகை மாதம் 6000 அல்ல, 9000 ரூபாயாக வழங்கப்படும். தமிழ்நாடு மீனவர், மீனவ மகளிர் சேமிப்பு நிவாரணத் திட்டம் மூலம் கடந்த அஞ்சு வருஷத்துல 117 ஆயிரம் கோடியே 94 லட்சம் ரூபாய் சேமிப்பு நிவாரணம் வழங்கப்பட்டிருக்கு.
இனி மீனவர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கைக்கான வயது வரம்பு 65-லிருந்து 70 வயதாக உயர்த்தப்படும். மீனவர் நல வாரியத்துல உறுப்பினராக இருப்போருக்கு இப்போ வழங்கப்பட்டு வரக்கூடிய நலத்திட்டங்களோடு கூடுதலாக, அவங்களுடைய 70 வயது முதல் 75 வயது வரை மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படும்னு மகிழ்ச்சியோடு நான் தெரிவிச்சுக்கிறேன்.
இப்படி மீனவர்களின் உண்மையான நண்பனா, உற்ற தோழனா செயல்பட்டு வருது உங்கள் திராவிட மாடல் அரசு.
ஆனா வெளியுறவுக் கொள்கையை கையில வச்சிருக்கக்கூடிய ஒன்றிய பாஜக அரசு, கடல் கடந்து மீன்பிடிக்கப் போகக்கூடிய நம்ம மீனவர்களைக் காக்கத் தவறிடுச்சு. தவறியது மட்டுமல்ல, வெளியுறவுக் கொள்கையில தோல்வியும் அடைஞ்சிருக்கு. சிறிய அண்டை நாடுகள் கிட்ட கூட இந்தியாவுக்குச் செல்வாக்கில்லாத நிலையை பிரதமர் மோடி உருவாக்கியிருக்கிறார்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்துல பிரதமர் மோடி என்ன சொன்னார்? மன்மோகன் சிங் என்ற பலவீனமான பிரதமர் ஆளுகிற காரணத்தால்தான் நம்ம மீனவர்கள் மீது தாக்குதல் நடக்குது, பலமான பிரதமராக நான் வந்தால் நடக்காது அப்படின்னு பேசினார்.
மதுரை எய்ம்ஸ் , கோவை, மதுரை மெட்ரோ ரயில், ஓசூர் விமான நிலையம், பேரிடர் நிவாரண நிதி, பள்ளிக் கல்வி நிதி, கீழடி ஆய்வறிக்கை, தொகுதி மறுவரையறையில உரிய நியாயம், நிதிப் பகிர்வுல தமிழ்நாட்டிற்கு உரிய பங்கு, தமிழ்நாட்டிற்கு மறுக்கப்படக்கூடிய புதிய ரயில்வே திட்டங்கள். இப்படி தமிழ்நாடு சார்பில் பிரதமர் மோடி கேட்க ஏராளமான கேள்விகள் இருக்கு.
இப்போ புதுசா ஒரு பிரச்சனை கிளம்பியிருக்கு. என்ன தெரியுமா? சிறுபான்மையின மக்கள், சிறுபான்மையின மக்களைக் குறிப்பா கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்களைக் குறிவச்சு அந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கு. என்னன்னா, அதாவது வெளிநாட்டு நிதி பங்களிப்பு திருத்த மசோதா. இதுக்காகவும் தமிழ்நாட்டுல இந்த ஸ்டாலின்தான் முதல் குரல் கொடுத்திருக்கிறேன்.
இந்தியா முழுக்க ஆயிரக்கணக்கான கிறிஸ்தவக் கல்வி, மருத்துவ அமைப்புகள் இயங்கி வருது. அதெல்லாம் இல்லாமப் போனா, அரசால அவங்க பண்ணிட்டு வர்ற சேவையை ஓரளவிலாவது நிரப்ப முடியாது என்பதையும் என்னுடைய கடிதத்துல அதை நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன். இந்தத் தாக்குதல் ஒரு மதத்திற்கு எதிரானது மட்டுமல்ல, இது மனிதகுலத்திற்கே எதிரானது.
அதிமுக என்ற கட்சி பாஜகவினுடைய கொத்தடிமைக் கூட்டமா மாறிப் போயிருக்கு. பாஜகவுக்கு எதிராகக் குரல் கொடுக்க அ தி மு க வுக்கு துணிச்சலில்லை. ஆனா திமுக வாக்குக் கொடுத்தால் அதை எப்படியாவது செஞ்சு முடிப்போம். அப்படி இந்தத் தேர்தல் களத்துல இறங்கியிருக்கக்கூடிய சூப்பர் ஸ்டார்தான் திமுக தேர்தல் அறிக்கை. ஒரு கோடியே 31 லட்சம் சகோதரிகள் பெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை இனி மாசம் 2000 ரூபாயாக வழங்கப்படும். புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கு உதவித் தொகை இனி 1000-த்திலிருந்து மாசத்துக்கு 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற பெண்கள் என எல்லா உதவித் தொகைகளும் டபுள் மடங்காக உயர்த்தி வழங்கப்படும்.
நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு 3500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு 4500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும். மகளிர் சுயஉதவிக் குழு சகோதரிகளுக்கு இனி எந்த ஷூரிட்டியும் இல்லாமல், கேரண்டி எல்லாம் இல்லாமல் 5 லட்சம் ரூபாய் வரை மானியத்தோடு கடன் உதவி வழங்கப்படும். குமரி மாவட்டம் இயற்கை பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்படுகிற மாவட்டம். இனி பேரிடர்கால இழப்பீடுகளா இறைவைப் பாசனப் பயிர்கள் மற்றும் நெல் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 25,000 ரூபாய், நீண்டகாலப் பயிர்களுக்கு 27,000 ரூபாய், மானாவாரிப் பயிர்களுக்கு 12,000 ரூபாய் என உயர்த்தி வழங்கப்படும்.
தமிழ்நாட்டை எப்படிப்பட்ட ஆபத்து சூழ்ந்திருக்குன்னு நான் சொல்லியிருக்கிறேன். இதிலிருந்து தமிழ்நாட்டைக் காப்பாத்தணும்னா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தொடர்ந்தாகணும். தமிழ்நாடு அணியா, டெல்லி அணியா? இது தர்ம யுத்தம். அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரிக்க நான் கேட்டுக்கிறேன் என பேசினார்.



