திருச்சி, மார்ச் 31 –
திருவெறும்பூர் அருகே கூத்தப்பார் பேரூராட்சி திமுக கவுன்சிலர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படுகொலை சம்பவம் அரசியல் விரோதத்தால் நடந்ததா அல்லது தொழில் போட்டியா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் பேரூராட்சிக்கு உட்பட்ட பாரதிபுரத்தை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரது மகன் ரஞ்சித்குமார் (38). இவர் கூத்தப்பார் பேரூராட்சியில் 11 வது வார்டு கவுன்சிலராகவும், திமுக கூத்தப்பார் பேரூர் கழக இளைஞரணி செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
கூத்தப்பாரை சேர்ந்த ரஞ்சித்குமார் திருவெறும்பூர் அருகே உள்ள சோழமா நகரில் புதிதாக வீடு கட்டி அண்மையில் குடியேறியுள்ளார். மேலும், இவர் திருவெறும்பூர் அரசு ஐடிஐ எதிரே உள்ள அரசு மதுபான கடையின் பார் ஏலம் எடுத்து நடத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு தனது தொழில் பார்ட்னரை சந்தித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சோழமாதேவி நோக்கி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். திருவெறும்பூரில் இருந்து நவல்பட்டு செல்லும் சாலையில் புதுத்தெரு அருகே ரஞ்சித்குமார் சென்றபோது, மர்ம நபர்கள் சிலர் அவரை வழி மறித்து கட்டையால் தாக்கி, பின்னர், அவரை அரிவாளால் தலை மற்றும் கால் தொடை பகுதியில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர்.
தலை சிதைக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் கிடந்த ரஞ்சித்குமாரை அவ்வழியே சென்றவர்கள் பார்த்து விட்டு உடனடியாக நவல்பட்டு காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இது குறித்து தகவல் அறிந்த நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், இந்த தகவலை அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து படுகொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த ரஞ்சித்குமாரின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதனிடையே நவல்பட்டு போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தடய அறிவியல், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். திருச்சி மாவட்ட எஸ்பி செல்வ நாகரத்தினம், திருவெறும்பூர் ஏ எஸ் பி அரவிந்த் பனாவத் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? அரசியல் முன் விரோதமா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்தல் நேரத்தில் திருவெறும்பூர் திமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



